அமெரிக்கா மீண்டும் ஒரு அரசு முடக்கத்தின் விளிம்பில் நிற்கிறது. இந்த முறை, ஒபாமா கேர் எனப்படும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமும், குடியேறிகளும்தான் இந்தப் பெரும் மோதலுக்குக் காரணமாகியுள்ளனர். சட்டவிரோத குடியேறிகளுக்குப் பலன் கொடுக்க ஜனநாயகக் கட்சியினர் முயற்சிப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்ட, இது பச்சைப் பொய் என ஜனநாயகக் கட்சியினர் பதிலடி கொடுக்கின்றனர். என்ன நடக்கிறது அங்கே? வாருங்கள் பார்க்கலாம்!
குடியரசுக் கட்சியின் வாதம் இதுதான். “சட்டவிரோத குடியேறிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வழங்க ஜனநாயகக் கட்சியினர் விரும்புகிறார்கள். அதற்காகத்தான் அவர்கள் அரசை முடக்கவும் தயாராக இருக்கிறார்கள்” என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ஹவுஸ் சபாநாயகர் மைக் ஜான்சனும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், ஜனநாயகக் கட்சியினர் சொல்வதே வேறு. “கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவக் காப்பீட்டுச் செலவு விண்ணை முட்டப்போகிறது. அந்தப் பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, குடியரசுக் கட்சியினர் குடியேறிகள் மீது பழிபோடுகிறார்கள்” என்கிறார்கள் அவர்கள்.
உண்மையில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், ஒபாமா கேர் திட்டத்தின் கீழ் அமெரிக்கர்களுக்குக் காப்பீட்டு பிரீமியத்தைக் குறைக்க தாராளமான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. அந்தச் சலுகைகள் 2025-ல் முடிவுக்கு வருகின்றன. ட்ரம்பின் புதிய வரி மசோதா வருவதற்கு முன்பு, அமெரிக்காவில் “சட்டப்பூர்வமாகத் தங்கியிருக்கும்” சில குடியேறிகளுக்கும் (அகதிகள் போன்றவை) இந்தச் சலுகை கிடைத்தது. அதை மீண்டும் கொண்டுவர மட்டுமே தாங்கள் முயற்சிப்பதாகவும், ஆவணமற்ற நபர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க வரிப் பணத்தைப் பயன்படுத்துவதை மத்திய சட்டமே தடை செய்கிறது என்றும் ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர்.
சரி, இந்தச் சலுகைகள் நிறுத்தப்பட்டால் என்ன ஆகும்?
சராசரியாக, மக்களின் காப்பீட்டுச் செலவு 75% வரை உயரும்! உதாரணமாக, 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் மாத பிரீமியம், 921 டாலரிலிருந்து , அதாவது சுமார் 76,500 ரூபாயிலிருந்து, 1,716 டாலராக ,அதாவது ,சுமார் 1 லட்சத்து 42,000 ரூபாயாக, கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயரும்! இதனால், 40 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் தங்கள் காப்பீட்டை இழக்க நேரிடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
ஒருபக்கம், இந்தத் திட்டத்தை நீட்டிக்க ஆகும் 350 பில்லியன் டாலர் செலவு… மறுபக்கம், கோடிக்கணக்கான மக்களின் உயரும் மருத்துவச் செலவு… அமெரிக்க அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது?
இந்தப் போராட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன? மறக்காமல் கமெண்டில் பதிவு செய்யுங்கள்.