மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்ட 37B அரசு மகளிர் இலவச பேருந்து திருமங்கலம் ரயில்வே கேட் அருகே வந்தபோது திடீரென பேருந்தின் படிக்கட்டு உடைந்து கீழே விழுந்தது.
இதனையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டு பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இலவசமாக இயக்கப்பட்டு வரும் மகளிர் பேருந்துகள் தரமற்ற முறையில் இயக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு மகளிர் பேருந்து படிக்கட்டு கீழே விழுந்து ஏற்பட்ட விபத்து பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இலவச மகளிர் பேருந்துகளின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
