PF கணக்கு வைத்துள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு ஒரு மிக முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது! ஓய்வுக்காலத்திற்குப் பிறகு கையில் கிடைக்கும் பென்ஷன் தொகையை அதிகரிக்க, இ.பி.எஃப்.ஓ (EPFO – Employees’ Provident Fund Organisation) ஒரு முக்கிய விதியை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
ஆனால், இந்தச் செய்தி சிலருக்கு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும், பலருக்கு ஏமாற்றத்தைத் தரலாம். அது ஏன்? யாரெல்லாம் இந்தப் பட்டியலில் வருகிறார்கள்? என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
இ.பி.எஸ் (EPS – Employees’ Pension Scheme) திட்டத்தின் கீழ், பழைய விதிமுறையை மீண்டும் அமல்படுத்தியுள்ளது இ.பி.எஃப்.ஓ (EPFO). இதன்படி, ஊழியர்கள் தங்கள் முழு அடிப்படைச் சம்பளத்தின் (Full Basic Salary) அடிப்படையில் அதிக பென்ஷனைப் பெறுவதற்கான வாய்ப்பு திரும்பக் கிடைத்துள்ளது.
விஷயம் என்னவென்றால், 2014-ம் ஆண்டிற்கு முன்பு ஒரு விதி இருந்தது. அதன்படி ஊழியர்கள் தங்கள் முழுச் சம்பளத்திற்கும் பென்ஷன் பங்களிப்பைச் செலுத்த முடியும். ஆனால், 2014-ல் ஒரு புதிய கட்டுப்பாடு வந்தது. அதன்படி, உங்களின் அடிப்படைச் சம்பளம் 50,000 ரூபாயாக இருந்தாலும், பென்ஷன் கணக்கீடு என்பது வெறும் 15,000 ரூபாய்க்கு மட்டுமே செய்யப்படும். இதனால் ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் பென்ஷன் தொகை மிகவும் குறைவாக, அதிகபட்சம் 7,500 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது.
இப்போது வந்திருக்கும் குட் நியூஸ் என்னவென்றால், அந்த 15,000 ரூபாய் என்ற வரம்பைத் தாண்டி, முழுச் சம்பளத்திற்கும் பென்ஷன் பிடிக்கும் பழைய முறை மீண்டும் வந்துள்ளது.
ஆனால் இங்கேதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது! இந்த அதிரடி சலுகை எல்லோருக்கும் கிடையாது. 2014-ம் ஆண்டிற்கு முன்பே பணியில் சேர்ந்து, அப்போதே ‘ஹையர் பென்ஷன்’ (Higher Pension) ஆப்ஷனைத் தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்.
டாக்டர் ராகுல் சிங் (Dr. Rahul Singh) இதுபற்றிக் கூறும்போது, “இது அனைவருக்கும் பொதுவானது அல்ல. 2014-க்குப் பிறகு பணியில் சேர்ந்த புதிய ஊழியர்களுக்கோ அல்லது பழைய முறையில் விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கோ இந்த அதிக பென்ஷன் பலன் கிடைக்காது” என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
பொதுவாக உங்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் PF தொகையில், 8.33% மட்டுமே பென்ஷன் கணக்கிற்குச் செல்லும். அதுவும் 1,250 ரூபாய்க்கு மிகாமல் இருக்கும். ஆனால் பழைய விதியின் கீழ் வருபவர்களுக்கு, இந்தத் தொகை அதிகமாகி, ஓய்வுக்காலத்தில் கையில் கிடைக்கும் பென்ஷன் பன்மடங்கு அதிகரிக்கும்.
ஆகவே, நீங்கள் 2014-க்கு முன் பணியில் சேர்ந்தவரா? பழைய திட்டத்தில் விருப்பம் தெரிவித்தவரா? என்பதை உடனே சரிபார்த்துக் கொள்ளுங்கள்!
