ஆதார் பயனர்களுக்கு குட் நியூஸ்: மின்னஞ்சல் அப்டேட் இனி இலவசம்!! முழு விவரம் இதோ…

ஆதார் அட்டை இன்று இந்தியாவில் மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அரசு நலத்திட்டங்கள், வங்கி சேவைகள், முதலீடுகள், கல்வி சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் அவசியமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே ஆதாரில் உள்ள தனிப்பட்ட தகவல்களை துல்லியமாகவும் புதுப்பித்தும் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

இந்த நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (UIDAI) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை புதுப்பிப்பதற்காக தற்போது வசூலிக்கப்படும் ரூ.75 கட்டணம், 2026 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை ஆறு மாதங்களுக்கு முழுமையாக விலக்கப்படுகிறது. இந்த சலுகை ஆதார் மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் அப்டேட்களுக்கு மட்டுமே பொருந்தும். இணையதளம் அல்லது பிற வழிகளில் அப்டேட் செய்தால் வழக்கம்போல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆதாருடன் மின்னஞ்சல் முகவரியை இணைப்பதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆதார் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் நேரடியாக மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். மேலும், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் நடைபெற்றால் அதுகுறித்த எச்சரிக்கைகளையும் உடனடியாக பெற முடியும். தற்போதைய டிஜிட்டல் காலத்தில் அதிகரித்து வரும் அடையாள மோசடிகளை தடுப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.

உங்களுடைய மின்னஞ்சல் முகவரி ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, UIDAI அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று “My Aadhaar” பிரிவில் உள்ள “Verify Email/Mobile Number” என்ற வசதியை பயன்படுத்தலாம். அங்கு ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கேப்சா குறியீட்டை உள்ளிட்டு OTP சரிபார்ப்பு செய்தால், மின்னஞ்சல் இணைப்பு வெற்றிகரமாக உள்ளதா என்பதை அறியலாம்.

எனவே, இதுவரை ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாதவர்கள் அல்லது புதுப்பிக்க வேண்டியவர்கள் இந்த இலவச வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது தகவல்களை பாதுகாப்பாகவும் புதுப்பித்தும் வைத்துக்கொள்ளலாம்.

Related News

Latest News