பழைய ஏடிஎம்மை வாங்கியவருக்கு அதனுள் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் கிடைத்த அதிர்ஷ்டவச சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதிர்ஷ்டம் எப்போது வரும், எப்படி வரும் எனத் தெரியாது. லாட்டரிச் சீட்டுமூலமும் வரலாம். பழைய ATM மூலமும் வரலாம்.
ஆம்…பழைய ஏடிஎம்மை வாங்கியவர் ஒன்றரை லட்ச ரூபாயைப் பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
குப்பைக்கிடங்கிலிருந்த அந்த ஏடிஎம் எந்திரத்தை 300 டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளார். அதன் இந்திய மதிப்பில் சுமார் 22 ஆயிரத்து 360 ரூபாய் ஆகும். அதை வீட்டுக்குக் கொண்டுவந்து திறக்க முயன்றுள்ளார்.
ஆனால், சாவி இல்லாததால் திறக்க முடியவில்லை. உடனே நண்பருடன் சேர்ந்து சுத்தியலால் உடைக்கத் தொடங்கினார்.
கஷ்டப்பட்டு உடைக்கத் தொடங்கிய அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. ஏடிஎம்மை உடைத்து முடித்தபோது, அதனுள் 2 ஆயிரம் டாலர் இருந்தது. இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் அந்த நபர். அந்த டாலர்களின் இந்திய மதிப்பு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் ஆகும்.
உடனே இந்தத் தகவலைத் தனது நண்பர்களுடன் அந்த நபர் பகிர்ந்துகொண்டார். அத்தோடு டிக்டாக் செயலியிலும் பதிவிட்டார். இந்த நாள் இனிய நாள் என்று தனது திடீர் அதிர்ஷ்டம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் அந்த நபர்.
என்றாலும், இந்த சம்பவம் எந்த நாட்டில் எப்போது நிகழ்ந்தது என்ற விவரம் வெளியாகவில்லை.