தங்கத்தின் விலை சமீபத்தில் சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால பார்வையில் அது இன்னும் வலுவான நிலையில் இருக்கிறது. அமெரிக்க அரசு கடுமையாக முயற்சி செய்து டாலரின் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த முயற்சிகள் உடையும் பட்சத்தில் தங்கம் விலை முக்கிய சொத்தமாக மாறி தங்கம் விலை உயரும்.இந்த நிலை உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் தங்கம் எப்படி வலுவாக நிற்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இதுதான் தங்க முதலீட்டாளர்களின் முக்கிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
உலக தங்க கவுன்சில் தகவலின்படி, பல நாடுகள் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையிலிருந்து தங்களைப் பாதுகாக்க தங்க கையிருப்பை அதிகரித்து வருகின்றன. இந்த நிலையான கொள்முதல் தங்க விலைக்கு வலுவான ஆதரவை அளிக்கிறது. இதேபோல் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கம், வெள்ளி இறக்குமதியை பெரிய அளவில் குறைத்துள்ளது.
உலகளாவிய கடன் அளவு அதிகரிப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. வரலாற்று ரீதியாக, கடன் அதிகரிக்கும் போதும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் போதும் மக்கள் பாதுகாப்பான சொத்தான தங்கத்தை நோக்கி திரும்புகின்றனர். இதுவும் தற்போது தங்கம் விலை உயர்வுக்கு சாதகமாக உள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம், எண்ணெய் விலை உயர்வு, ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கிய பாதைகளில் ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவை உலக அளவில் பதற்றத்தை அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான இடமாக தங்கத்தைத் தேர்வு செய்கின்றனர், ஆனால் டாலர் மதிப்பு வலுபெறுவதால் தங்கம் தற்போது தனது பொலிவை இழந்துள்ளது.
வெல்ஸ் பார்கோ, கோல்ட்மேன் சாக்ஸ், ஜேபி மார்கன் உள்ளிட்ட முன்னணி உலக வங்கிகள் தங்கத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளன. இதன் காரணமாக 2026-க்கான தங்கம் விலை உயர்வு இலக்கை 5400 முதல் 6000 டாலர் வரை உயர்த்தியுள்ளன.இப்போது தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 6,000 டாலருக்கு உயர்ந்தால் ஒரு கிராம் தங்கத்தின் உலக விலை சுமார் 192.90 டாலராகும். இதை இந்திய மூலம் கணக்கிட்டால், இந்தியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.19,758 வரை செல்லும்.இதன் மூலம் தற்போதைய நாணய மதிப்பு தொடரும் பட்சத்தில் தங்கம் விலை இந்த வருடத்தின் இறுதிக்குள் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 20000 ரூபாய் வரையில் உயரும் என கணக்கிடப்படுகிறது.
இதேவேளையில் உலக நாடுகளின் கடன், அரசியல் நிச்சயமின்மை, வட்டி விகித மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணிகள் தங்கத்துக்கு சாதகமாகவே செயல்படுகின்றன. குறுகிய காலத்தில் விலை ஏற்ற இறக்கம் இருந்தாலும், தங்கம் நீண்டகால பாதுகாப்பான முதலீடாகவே திகழ்கிறது.
