தங்கத்தின் விலை இனி குறைய வாய்ப்பில்லை என்றும், வரும் மாதங்களில் மேலும் உயரக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள், அதாவது மார்ச் மாதத்திற்குள் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 5,000 டாலரை எட்டும் என உலகப் புகழ்பெற்ற UBS வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது.
இது தற்போதைய தங்க விலையை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும். தங்கம் மட்டுமல்லாமல், வெள்ளி விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது.இந்த திடீர் விலை உயர்வுக்கான காரணங்களை விளக்கி UBS வங்கியின் கமாடிட்டி பிரிவு தலைவர் டொமினிக் ஷ்னீடர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருவதும், சர்வதேச அரசியல் பதற்றங்களும் தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக அமெரிக்கா–வெனிசுலா தொடர்பான அரசியல் சூழல் உள்ளிட்ட காரணங்களால் உலக சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை விட பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைத் தேர்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், வெள்ளி விலை ஒரே நாளில் உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 80 டாலரை எட்டி, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 11 நாட்களில் 9 நாட்கள் வெள்ளி விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தங்கம் விலையும் ஜனவரி மாத டெலிவரிக்காக ஒரு அவுன்ஸுக்கு 4,482 டாலராக முடிவடைந்து, வரலாற்றில் மூன்றாவது உயர்ந்த விலையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
UBS வங்கி வெளியிட்டுள்ள மற்றொரு கணிப்பில், 2026 ஆம் ஆண்டு இறுதியில் தங்க விலை சற்று குறைந்து ஒரு அவுன்ஸுக்கு 4,800 டாலராக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இது முன்னதாக கணிக்கப்பட்ட 4,300 டாலரை விட 500 டாலர் அதிகம் என்பதால், நீண்ட காலத்தில் தங்க விலை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதால், அங்கு வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் தங்க விலைக்கு ஆதரவாக உள்ளது. மொத்தத்தில், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு இது லாபகரமான காலமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
