ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏறுவதும் இறங்கிவதுமாக இருந்து வருகிறது. கடைசியாக ஆகஸ்ட் 6ம் தேதி சவரனுக்கு ரூ.75,000-ஐத் தாண்டி அதிர்ச்சி கொடுத்தது. அது போதாது என்று ஆகஸ்ட் 8ம் தேதி ரூ.75,760 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் ஆரம்பமானது தங்கம் விலை சரிவு.
இருப்பினும் ஆகஸ்ட் 18ஆம் தேதியான நேற்று 22 காரட் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் தங்கம் ரூ.9,280க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.74,240க்கும் விற்பனையானது. இந்நிலையில் 10வது நாளாக இன்றும் தங்கம் விலை சரிவிலேயே இருப்பதால் நகை பிரியர்கள் காட்டில் மழை தான்.
அந்த வகையில், இன்று அதாவது ஆகஸ்ட் 19ம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,235க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.73,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் , ‘தங்கம் விலை அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் 90 டாலருக்கு மேல் குறைந்துள்ளது. டிரம்ப் தங்கத்திற்கும் வரி போடுவார் என்று நினைத்து உலகெங்கும் வரி எக்குத்தப்பாக எகிறியிருந்தது. ஆனால், இப்போது வரி போட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார். இதனால் தங்கம் விலை கணிசமாகக் குறைகிறது.
ஆனால், மிகச் சீக்கிரம் ஏறிவிடும். ஏனென்றால் இதுவரை இல்லாத வகையில் அமெரிக்கா டாலர் நோட்டுகளை அதிகமாக அச்சடித்து வருகிறார்கள்’ என பதிவிட்டுள்ளார். அதாவது தங்கம் விலை சரிவது தற்காலிகமானது என்பது ஆனந்த் சீனிவாசன் சொல்ல வரும் கருத்து.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.