ஒட்டுமொத்த உலக சந்தையுமே ஒரு மிக முக்கியமான அறிவிப்பை நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது ஜூலை மாத வட்டி விகிதக் கொள்கை முடிவை இன்று நள்ளிரவு அறிவிக்க உள்ளது.
இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு சுமார் 12:30 மணி அளவில் பெடரல் வங்கியின் தலைவர் கெவின் வார்ஷ் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவு, நம் ஊர் தங்கம் விலையைத் தீர்மானிக்கப் போகும் மிக முக்கியமான காரணியாகப் பார்க்கப்படுகிறது.
எப்படி நமது இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட கால இடைவெளியில் ரெப்போ வட்டி விகிதங்களை அறிவிக்கிறதோ, அதேபோல்தான் அமெரிக்க மத்திய வங்கியும் இந்த வட்டி விகித முடிவுகளை எடுக்கிறது.
தற்போதைய சூழலில், வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, இந்த முறை வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஜூன் மாத அமெரிக்கப் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு தரவுகள் ஓரளவிற்குச் சிறப்பாக இருந்ததாலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் இறக்குமதி வரி உயர்வு போன்ற காரணங்களால் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாலும், பெடரல் வங்கி நிதானமான போக்கையே கடைப்பிடிக்கும் எனக் கருதப்படுகிறது.
புள்ளிவிபரங்களின்படி, வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்பதற்கு 62 சதவீத வாய்ப்புகள் உள்ளன. இன்றைய கூட்டத்தின் முடிவைப் பொறுத்து தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பதை மூன்று முக்கிய நிலைகளில் நாம் பார்க்கலாம்.
முதலாவதாக, எதிர்பாராத விதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிவைச் சந்திக்கும். வட்டி விகிதம் உயரும்போது அமெரிக்க டாலர் வலிமை பெறும் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து பணத்தை எடுத்து டாலர் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள்.
இரண்டாவதாக, வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லையென்றாலும், எதிர்காலத்தில் வட்டியை உயர்த்த வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையான வார்த்தைகள் அறிக்கையில் இடம் பெற்றால், அதுவும் தங்கத்தின் விலையில் லேசான சரிவை ஏற்படுத்தும்.
மூன்றாவதாக, முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு பாசிட்டிவ் சிக்னல். அதாவது, தற்போது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாவிட்டாலும், வரும் செப்டம்பர் மாதக் கூட்டத்தில் வட்டியை குறைக்க வாய்ப்புள்ளது என்று பெடரல் வங்கி தலைவர் சூசகமாகத் தெரிவித்தால், அது தங்கத்திற்கு மிகப்பெரிய சாதகமாக அமையும்.
அத்தகைய அறிவிப்பு வந்தால், டாலர் பலவீனமடைந்து தங்கத்தின் விலை புதிய உச்சத்தை நோக்கி எகிறத் தொடங்கும். எனவே, இன்று நள்ளிரவு வெளியாகப்போகும் அந்த அறிக்கையில் இடம்பெறப்போகும் ஒவ்வொரு வார்த்தையும் அடுத்த ஒன்றரை மாதங்களுக்குப் பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலையின் திசையைத் தீர்மானிக்கப் போகிறது. தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள் இந்த முடிவை உற்று கவனிப்பது அவசியமாகும்.
