09.06.2026; அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்…

கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறிப்பிடத்தக்க ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த மே மாத இறுதிவரை நிலையான மாற்றங்களுடன் இருந்த தங்கம் விலை, ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவை சந்தித்தது. ஜூன் 1-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.130 குறைந்ததுடன், ஒரு சவரன் ரூ.1,040 வரை சரிந்தது. அதனைத் தொடர்ந்து 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் விலையில் மாற்றம் ஏதும் இல்லாதபோதிலும், 4-ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் விலை குறையத் தொடங்கியது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் நேற்று கிராமுக்கு ரூ.130 மற்றும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,070-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,560-க்கும் விற்பனையானது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.560 மற்றும் சவரனுக்கு ரூ.4,480 வரை விலை குறைந்துள்ளது.

தங்கத்தின் இந்த தொடர் சரிவுக்கு பல்வேறு சர்வதேச பொருளாதார காரணங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்துள்ளதுடன், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்க அழுத்தமும் அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களை தங்க முதலீட்டிலிருந்து விலகச் செய்துள்ளது. வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறைந்ததே விலை வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,13,600-ஆகவும், கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,200-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், கடந்த நான்கு நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.70 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News