உங்களிடம் இப்போது ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பணத்தை பேங்க் எஃப்டியில் போடுவீர்களா? ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வீர்களா? அல்லது தங்கம் வாங்குவீர்களா? இன்றைய இளம் தலைமுறையினரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், நூற்றுக்கு தொண்ணூறு பேர், பங்குச்சந்தை அல்லது பிட்காயின் என்றுதான் சொல்வார்கள்.
ஏனென்றால், தங்கம் வாங்குவது பழங்காலத்து முதலீடு, எஃப்டி என்பது வயதானவர்கள் செய்வது, ஷேர் மார்க்கெட் மட்டும்தான் நமக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுக்கும் என நம்புகிறார்கள். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மார்க்கெட்டில் நடந்த ஒரு மாபெரும் புள்ளிவிவரம், ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீங்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு ஒரு லட்ச ரூபாயை பங்குச்சந்தையில் போட்டிருந்தால் உங்களுக்கு லாபமா, அல்லது அதே பணத்தில் தங்கம் வாங்கியிருந்தால் உங்களுக்கு லாபமா? வாருங்கள் ஒரு சிறு கணக்கீடு மூலமாக மிக விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த ஐந்தாண்டுகளில் கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போர் என உலகமே மிகப்பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. இந்த காலகட்டத்தில் உழைத்துச் சம்பாதித்த பணத்தை எப்படிப் பாதுகாப்பாக முதலீடு செய்வது என்பதுதான் அனைவரின் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.
இப்போது நீங்கள் அக்டோபர் இரண்டாயிரத்து இருபத்தி ஒன்றில், ஒரு லட்ச ரூபாயை நான்கு வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்ததாக வைத்துக்கொள்வோம்.
முதலாவதாக, அதை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஐந்து வருட எஃப்டி திட்டத்தில் போட்டிருந்தால், சாதாரண குடிமக்களுக்கு அது முப்பது சதவீதம் வளர்ந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயாகவும், சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் ரூபாயாகவும் உயர்ந்திருக்கும்.
எந்தவிதமான ரிஸ்க்கும் இல்லாமல் ஒரு பாதுகாப்பான லாபத்தை எஃப்டி நமக்குக் கொடுத்துள்ளது. சரி, ஷேர் மார்க்கெட்டின் நிலைமை என்ன?
நீங்கள் அந்த ஒரு லட்ச ரூபாயை இந்தியாவின் டாப் ஐம்பது கம்பெனிகளைக் கொண்ட ‘நிஃப்டி பிப்டி’ இண்டெக்ஸில் போட்டிருந்தால், கடந்த ஐந்து வருடங்களில் அது உங்களுக்கு வெறும் ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயை மட்டுமே திருப்பிக் கொடுத்திருக்கும்.
ஷேர் மார்க்கெட்டில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறதோ, அந்த அளவுக்கு லாபம் இருக்கும் என்று மார்தட்டிக்கொண்ட பலருக்கும் இந்த டேட்டா ஒரு பேரிடியாகவே அமைந்துள்ளது.
பங்குச்சந்தை கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவில் எந்தவொரு அதிரடி ஏற்றத்தையும் சந்திக்காததே இதற்குக் காரணம்.
சரி, இந்த ஐந்து வருடங்களில் அதிக லாபம் சம்பாதித்துக் கொடுத்தது பிட்காயின்தானா? என்றால்,ஆமாம், நீங்கள் அதே ஒரு லட்ச ரூபாயை பிட்காயினில் போட்டிருந்தால் அது உங்களுக்கு எழுபத்தி ஐந்து சதவீதம் லாபத்தைக் கொடுத்து, ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாயாக மாறியிருக்கும்.
இதற்கு முக்கியக் காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்ததுதான்.
அப்படியென்றால் இந்த ஐந்து ஆண்டுகளில், பல கோடீஸ்வரர்களுக்கும், சாமானியர்களுக்கும் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது எந்த முதலீட்டில் தெரியுமா? நீங்கள் உங்களுடைய ஒரு லட்ச ரூபாயை, தங்கமாக வாங்கி வைத்திருந்தால் மட்டும்தான்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு கிராம் நாலாயிரத்து எழுநூறு ரூபாய்க்கு விற்ற இருபத்தி நான்கு காரட் தங்கம், இன்று பதினான்காயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகிறது.
அதாவது உங்கள் ஒரு லட்சம் ரூபாய், இன்று கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாயாகப் பன்மடங்கு உயர்ந்திருக்கும். பங்குச்சந்தையில் கிடைக்கும் லாபத்தை விட நான்கு மடங்கு லாபத்தையும், எஃப்டி மற்றும் பிட்காயினை விட பல மடங்கு அதிக வருமானத்தையும் ஒரு எளிய முதலீடான தங்கம் சாதித்துக் காட்டியுள்ளது.
பங்குச்சந்தை லாபகரமாக இருந்தாலும், அதில் உள்ள அபாயங்கள் அதிகம் என்பதையும், தங்கம் என்பது என்றுமே ஆபத்பாந்தவன் என்பதையும் இந்த ஐந்தாண்டு கால மாஸ்டர் ரிப்போர்ட், உலக முதலீட்டாளர்களுக்கு ஒரு பாடமாகவே உணர்த்தியுள்ளது.
