தங்கம் விலை 38% எல்லாம் குறையாது! ஆனால் இது நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் என்ன சொல்கிறார் பாருங்கள்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டுவந்துள்ள ரெசிப்ரோக்கல் வரியின் காரணமாகத் தங்கம் விலை மளமளவென அதிகரித்து இமாலய உச்சத்தை எட்டிவிட்டது. இதற்கிடையே தங்கம் விலை 38% வரை குறைந்து தரை தட்டிவிடும் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டது கடந்த சில நாட்களாகவே பரபரப்பான பேசுபொருளாகிவிட்ட நிலையில், இதைப் பற்றி ஆனந்த் சீனிவாசன் எளிமையான விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது YouTube பக்கத்தில், மார்னிங் ஸ்டார் செய்தி நிறுவனத்தின் அனாலிசிஸ்ட் ஸ்டூவர்ட் என்பவர் தங்கம் விலை 38% வரை சரியும் எனக் கணித்துள்ளார். இதற்கு முன்பு தங்கம் விலை இந்தளவுக்குச் சரிந்து இருக்கிறதா என்றால்… ஆம் விழுந்து இருக்கிறது. 1980ம் ஆண்டு அதுபோல நடந்து இருக்கிறது. 800 டாலராக இருந்த இருந்த தங்கம் விலை 200 டாலராக சரிந்தது. அப்போது அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநராக Bob Walker என்ற ஒருவர் இருந்தார். அவர் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை 20%ஆக உயர்த்தி, அமெரிக்காவை மிகப் பெரிய பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளினார். அப்போது பணவீக்கம் உச்சத்தில் இருந்ததால் அந்த நடவடிக்கை தேவைப்பட்டது. இப்போதும் பணவீக்கம் முழுமையாகக் குறைவதற்கு முன்பே அமெரிக்க வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாலேயே தங்கம் விலை அதிகரிக்கிறது.

தற்போதைய சூழலில் டிரம்ப் மாற வாய்ப்பில்லை. அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் தான். அதன் பிறகும் வே.டி. வான்ஸ் போன்ற நபர் அதிபரானால் நிலைமை மேலும் மோசமாகும். அங்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பலவீனமாகவே இருக்கிறது. மற்றொருபுறம் புதின் மற்றும் ஜி ஜின்பிங் கூட கிட்டதட்ட மன்னராட்சி போலத் தான் நடத்தி வருகிறார்கள். இவர்கள் மூவரும் இருக்கும் வரை புவிசார் அரசியல் பதற்றம் முடியாது.

ஏற்கனவே சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் கைவசம் இருக்கும் டாலரை விற்றுவிட்டுத் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். டிரம்ப் செய்யும் கூத்தை எல்லாம் பார்த்த பிறகு சீனா தங்கம் வாங்குவதை அதிகரிக்கவே செய்யும் என நினைக்கிறேன். எனவே, இப்போது இந்த சூழல் இல்லை. அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை வர வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்டால், வரலாம். ஆனால் அப்போது நமக்கு முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துவிடும்.

அமெரிக்கா வட்டி விகிதத்தை அதிகரித்தால் மட்டுமே இதுபோல நடக்கும். ஆனால், அமெரிக்க வட்டி விகிதத்தை அதிகமாக உயர்த்தினால் இந்திய ரூபாய் அழுத்தத்தில் வரும். இங்கிருக்கும் அந்நிய முதலீடுகளை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். எல்லா டாலரும் அமெரிக்காவுக்குப் போய்விடும். ரூபாய் மதிப்பும் சரியும். எனவே, ரூபாய் மதிப்பில் சரிந்தாலும் 10 முதல் 12% மட்டுமே தங்கம் விலை சரியும். ஆனால், அப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் துல்லியமாகக் கணிக்கவே முடியாது” என்று பதிவிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை பொதுமக்கள் கண்டிப்பாக முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news