பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா மற்றும் நேரடி நன்மை பரிமாற்ற திட்டங்களின் கீழ், எல்பிஜி எரிவாயு மானியம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்த பின்னரும் மானியம் கணக்கில் வராமல் தாமதமாகும் நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற பிரச்சனையை நீங்கள் சந்தித்தாலும் கவலைப்பட தேவையில்லை; இதை வீட்டிலிருந்தே சரி செய்யலாம். மானியம் வராததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, பயனாளியின் வங்கிக் கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாமல் இருப்பது தான். அதேபோல், e-KYC செய்யப்படாததால் கூட DBT பரிமாற்றம் தடைபடலாம். இதனால், மானியம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
உங்களுக்கு மானியம் வருகிறதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள www.mylpg.in என்ற இணையதளத்திற்குச் சென்று, நீங்கள் பயன்படுத்தும் எரிவாயு நிறுவனத்தின் அதாவது இந்தியன் ஆயில், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் போன்றவற்றில் ஒரு லோகோவைத் தேர்வு செய்யுங்கள்.
அங்கு “கருத்து தெரிவிக்கவும்” அல்லது “புகாரைப் பதிவு செய்யவும்” என்ற விருப்பத்தை கிளிக் செய்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் எல்பிஜி ஐடியை உள்ளிட்டு ‘சமர்ப்பி’ செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் மானியம் தொடர்பான அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும்.
மானியம் பெறப்படவில்லை எனில், அதே தளத்தில் நேரடியாக புகார் அளிக்கலாம். அல்லது, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புகார் தளம் pgportal.gov.in மூலமாகவும் புகார் செய்யலாம்.
ஆதார் இணைப்பு மற்றும் e-KYC விவரங்களை புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதன் மூலம் உங்கள் எல்பிஜி மானியம் எந்த சிக்கலுமின்றி வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
