வாகனங்களுக்கான நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகர காவல்துறை அமல்படுத்தியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகை ₹300 கோடி வரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத் தொகையை வசூலிக்க, சென்னை காவல்துறை காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. நகரில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்துள்ளன.
இதைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை நேரடி அபராதங்களை விதிப்பதுடன், அதிநவீன கேமராக்களையும் பயன்படுத்தி வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கிறது.
அதிவேகம் ஓட்டுதல், சிக்னல் மீறுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிய படி வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும், பல வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக அபராதத்தை செலுத்தாமல் வைத்து ₹300 கோடியில் மேற்பட்ட தொகை நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில் தான் நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.