Friday, December 27, 2024

இலவச ரயில் பயணம்

இனி சொகுசு ரயிலில் டிக்கட் எடுக்காமல்
இலவசமாகப் பயணம் செய்யலாம்.
கேட்கவே ஹய்யா…என ஜாலியாக இருக்குதுல்ல….
இது, நம்ம நாட்ல இல்ல…

ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான லக்ஸம்பர்க் நாட்டில்
இலவச ரயில் பயணத்தை அந்நாட்டு அரசாங்கம்
நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 6 லட்சம்தான்.
அதேசமயம் ஐரோப்பிய நாடுகளிலேயே பணக்கார நாடும் இதுதான்.
இங்கு தனிநபர் வருமானமும் மிக அதிகம்.

2.856 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்டுள்ள
இந்த நாட்டிலிருந்து பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய
நாடுகளுக்கு அரை மணி நேரத்தில் காரில் சென்றுவிடலாம்.

அப்படியெனில், எதற்காக இந்த இலவசப் பயணச் சலுகை…?
தேர்தலில் வெற்றிவாகை சூடவா எனக் கேட்டால் இல்லை என்பதே பதில்..

சின்னஞ்சிறு நாடான லக்ஸம்பார்க்கில் கடுமையான டிராபிக் ஜாம்.
இந்தப் போக்குவரத்து நெருக்கடியை சமாளித்து தீர்வு
காணத்தான் இந்த அதிரடி சலுகை..
எனக்கு வேற வழி தெரியல ஆத்தா என்பதுபோல இருக்கிறதா?)
ரயில், பேருந்து, டிராம் வண்டி என அனைத்திலும் இலவசப் பயணம்தான்.

2020 ஆம் ஆண்டு, மார்ச் 1 ஆம் தேதிமுதல் இந்தத் திட்டம்
நடைமுறைக்கு வந்துள்ளது.

இதற்காக ஆண்டுக்கு 562 மில்லியன் டாலர் செலவாகும் என்று
அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டுப் பொதுமக்கள் மட்டுமன்றி,
சுற்றுலாப் பயணிகளும் இந்த இலவசப் பயணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

லக்ஸம்பர்க் நகரில் வேலை வாய்ப்புகள் அதிகம்.
ஆனால், வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளோ மிக அதிகம்.
இதன்காரணமாக லக்ஸம்பர்க் நகரில் தங்காமல்,
அண்டை நாடுகளிலிருந்து தினமும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும்
அதிகமான பணியாளர்கள் வந்துசெல்கின்றனர்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித்
தவிக்கிறது இந்நகரம். 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்நகரில்
ஆயிரம்பேருக்கு 662 கார்கள் என்ற விகிதத்தில் வாகனங்கள் இருந்தன.
இதன்பிறகு, தனிநபர் வாகனப் போக்குவரத்து குறைந்து
பொதுப்போக்குவரத்துப் பயன்பாடு அதிகரிக்கும் என்று நம்புகிறது அரசு.

இதுபற்றிக் கூறியுள்ள அந்நாட்டுப் போக்குவரத்து அதிகாரிகள்,
”கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கும் சுற்றுச்சூழல்
பாதிப்புக்கும் தீர்வு தரும்” என்று தெரிவித்துள்ளனர்.

Latest news