2025-26 கல்வியாண்டுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் தொடங்கவிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், பொருளாதார ரீதியாக நலிவடைந்த மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பயிலும் வாய்ப்பு பெறலாம்.
2009ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாடளாவிய அளவில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் சமூக நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 8,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் பயனாளர்களாக ஏற்கனவே 4.60 லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது அரசுத்தரப்பின் தகவல்.
இந்த வாய்ப்பு எல்.கே.ஜி மற்றும் 1ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது. ஒரு முறை சேர்க்கை பெற்ற பிறகு, அந்த மாணவர்கள் 8ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற முடியும். சிறுபான்மை அந்தஸ்து பெறாத மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் பிற தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க இத்திட்டம் செயல்படும்.
விண்ணப்பிக்கும் குழந்தையின் வீட்டு அடிப்படையில், 1 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகள் மட்டுமே தேர்வாகும். குழந்தையின் வயது எல்.கே.ஜிக்கு சேர்வதற்கான பருவத்தில், அதாவது 3 வயது முதல் 4 வயதுக்குள் இருக்க வேண்டும். பெற்றோர் வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சமூகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், 3ஆம் பாலினத்தவர்கள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டும் ஏற்கப்படும். தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு அதிகபட்சம் ஐந்து பள்ளிகள் வரை தேர்வு செய்யலாம். தேர்வான பள்ளிகளில் விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களில் குழந்தையின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை, வருமானச் சான்றிதழ், வகுப்பு சான்றிதழ் மற்றும் சிறப்புப் பிரிவுக்கான சான்றிதழ்கள் அவசியம் வழங்கப்பட வேண்டும்.
மாணவர் சேர்க்கை குறித்து விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான ஆவணங்களுடன், ஆன்லைன் மூலம் நேரத்தோடு விண்ணப்பிப்பது முக்கியம்.
தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பெற இது ஒரு அரிய வாய்ப்பு என்றே சொல்லலாம்.