Tuesday, May 13, 2025

ராணுவத்தினர் குறித்து சர்ச்சை பேச்சு – செல்லூர் ராஜுக்கு முன்னாள் ராணுவத்தினர் கண்டனம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : “ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். எனவே பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல” என அவர் பேசினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செல்லூர் ராஜுக்கு முப்படை முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சமீபத்தில் ராணுவ வீரர்களை பற்றி பேசியது தமிழகம் முழுவதும் முன்னாள் ராணுவத்தினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மாபெரும் தெர்மோகோல் கருத்துகளையே மக்கள் இன்று மறந்திருக்காத நிலையில் மீண்டும் ஒரு பேரறிவு பூர்வமான கருத்தை சொல்லி அவரை அவரே தரம் தாழ்த்தி கொண்டு இருக்கிறார்.

செல்லூர் ராஜு சொல்வதுபோல, ஆயுதங்களை கொடுத்துவிட்டால் போதுமா? அந்த எந்திரங்கள் தானாக இயங்கி போரில் வெற்றி பெறலாம் என்றால் ராணுவம் எதற்கு கலைத்து விடலாமா? அவரது சிறுபிள்ளை தனமான கருத்துகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest news