Wednesday, January 15, 2025

ஒரே மேடையில் 6 பெண்களுக்குத்
திருமணம் செய்துவைத்த தந்தை

ஒரே மேடையில் தன் மகளுடன் 2 இந்துப் பெண்கள்,
3 முஸ்லிம் பெண்கள் என்று 6 பெண்களுக்குத் திருமணம்
செய்து அசத்தியுள்ளார் ஒருவர்.

உரிய பருவத்தை அடைந்தும் பல்வேறு காரணங்களால்
திருமணம் நடைபெறாமல் ஏராளமான பெண்கள் முதிர்
கன்னிகளாகவே இருந்துவிடுகின்றனர். குறிப்பாக,
வரதட்சணைக் கொடுமையால், திருமணம் ஆகாமலேயே
வாழ்நாளைக் கழித்துவருகின்றனர்.

இந்த நிலையில், தந்தை ஸ்தானத்தில் செயல்பட்டு
ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்களுக்குத் தலா
10 சவரன் நகைபோட்டுத் தன் சொந்தச் செலவில்
அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளார்
நல்ல உள்ளம் படைத்த ஓர் அன்பர். அதுவும் வரதட்சணைக்
கொடுமை அதிகம் உள்ள கேரள மாநிலத்தில் என்பதுதான்
அனைவரின் ஆச்சரியமும்.

கேரள மாநிலம், தலாயி பகுதியைச் சேர்ந்தவர் சலீம்.
இவர் தன் மகள் சமீசாவுக்கு வரன் தேடிவந்தார். வரன்கள்
அனைவரும் வரதட்சணை எதிர்பார்த்தனர். அத்துடன்
திருமணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தவேண்டும்
என்றும் கூறினர். அதனால், அவர்கள் அனைவரையும்
தட்டிக்கழித்தார்.

அப்போது சலீமின் மனைவி ரூபினா, நமக்கு வசதி
வாய்ப்பு இல்லையாயென்ன? ஏன் இப்படி அல்லாடுகிறீர்கள்
என்று கேட்டார். அதற்கு சலீம், ”எல்லாம் காரணமாகத்தான்”
என்று சொல்லிவந்தார்.

இறுதியாக அவர் எதிர்பார்த்தபடியே மகளுக்கு வரன்
அமைந்தார். உடனடியாகத் திருமண நாளையும் குறித்தார்.
அந்த நாளில் தனது மகளுக்கு மட்டுமன்றி, தான் தேர்ந்தெடுத்த
ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்களுக்கும் அதே
மேடையில் திருமணத்தை நடத்தினார்.

அவர்களில் 2பேர் இந்துப் பெண்கள், 3பேர் முஸ்லிம் பெண்கள்.
திருமணத்தின்போது 6 பேரும் ஒரே மாதிரியான புடவை
அணிந்திருந்தனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்,
இந்துப் பெண்களுக்கு இந்து முறைப்படியும், முஸ்லிம் பெண்களுக்கு
இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்ததுதான்.

சலீமின் மகள் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர் அனைவரும்
அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

சலீன் இந்த மனித நேயச்செயலுக்கு வலைத்தளங்களில்
பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Latest news