மட்டன் சமைத்துத் தராத மனைவியைப் பற்றிக்
காவல்துறை உதவி எண்ணான 100க்கு டயல்செய்து
அதிர வைத்துள்ளார் கணவர் ஒருவர்.
ஆபத்தான நேரத்தில் உதவிக்காகத் தொடர்புகொள்ள
அறிவிக்கப்பட்டுள்ள காவல்துறைக் கட்டுப்பாட்டு
எண்ணைத் தப்பான நோக்கத்திற்காகப் பயன்படுத்திய
நபரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், செர்லா
கௌரரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். 29 வயதாகும்
இவர் மார்ச் 18 ஆம் தேதி இரவில் மதுமானம் அருந்தியுள்ளார்.
பிறகு இறைச்சிக் கடைக்குச் சென்று ஆட்டிறைச்சி வாங்கிய
அவர் தனது மனைவியிடம் கொடுத்து அதனை சமைத்துத்
தருமாறு கேட்டுள்ளார்.
கணவர் குடித்திருந்ததால் மனம் உடைந்த மனைவி
மட்டன் சமைக்க மறுத்துவிட்டார்.
அதனால் கோபம் தலைக்கேறிய நவீன், மனைவிமீது
புகார் அளிக்க காவல்துறைக் கட்டுப்பாட்டு அறை
எண் 100க்கு டயல்செய்து தன் மனைவிமீது நடவடிக்கை
எடுக்குமாறு கூறினார்.
அது குறும்பான அழைப்பு என்று அந்த அழைப்பைத்
துண்டித்துவிட்டனர். தொடர்ந்து நவீனிடமிருந்து 6 முறை
அழைப்பு வந்ததால், பாடம்புகட்ட நினைத்த காவல்துறை
ரோந்துக் குழு நவீன் வீட்டுக்குச் சென்றது. அப்போது நவீன்
போதையில் இருந்ததால் நடவடிக்கை எடுக்காமல் திரும்பி
வந்துவிட்டது.
மறுநாள் காலையில் நவீன் வீட்டுக்கு மீண்டும் சென்ற
காவல்துறைப் பல்வேறு பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்து
அவரைக் கைதுசெய்தது. அப்பொழுது போதையில் தான்
செய்த தவறை உணர்ந்த நவீன் போலீசாரிடம் மன்னிப்பு
கேட்டுள்ளார்.