Sunday, December 7, 2025

அமெரிக்க விமானத்தை திருடிய விமான ஊழியர்! கடைசியில் நடந்த விபரீதம்!

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள ‘சியாட்டில்-டாகோமா’ விமான நிலையத்தில் 2018 ஆகஸ்ட் 10ம் தேதி அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. அந்நாளில் ரிச்சர்ட் ரசல் என்ற 29 வயது விமான தரைத்தள ஊழியர், எவ்வித அனுமதியுமின்றி Horizon Air Q400 என்ற பயணிகள் விமானத்தை இயக்கி பறக்கவிட்டார்.

ரசல், விமான நிலையத்தில் பார்சல் ஏற்றும் பணியில் இருந்தவர். பைலட் உரிமம் இல்லாவிட்டாலும், தனது பணியால் விமான இயக்கம் குறித்த அடிப்படை அறிவு பெற்றிருந்தார். அன்று அவர், விமானத்தை தனியாக இயக்கி, சுமார் 75 நிமிடங்கள் வானில் பறந்தார். அந்த நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

உரையாடலின் போது, ‘நான் யாருக்கும் தீங்கு செய்ய விரும்பவில்லை. சில நிமிடங்கள் வானில் பறந்து பார்ப்பதற்காகதான் இது’ என கூறினார். எந்தவொரு ஆயுதத் தாக்குதலாகவும் இதை கருதக்கூடாது என அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்தனர். விமானம் இறுதியில் Puget Sound அருகே உள்ள கேட்ரான் தீவில் விழுந்து நொறுங்கியது. அதில் ரசல் உயிரிழந்தார்.

பின்னர் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், இது தற்கொலை நோக்கத்துடன் நிகழ்ந்ததாக கூறப்பட்டது. ரசல் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், அமெரிக்காவில் விமான நிலைய பாதுகாப்பு குறைபாடு குறித்து பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

ரிச்சர்ட் ரசலின் செயலால் எவருக்கும் சேதம் நேரவில்லை என்றாலும், இது விமான நிலையங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் மீதான நம்பிக்கையை சவாலுக்கு உட்படுத்திய சம்பவமாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News