நடப்பு IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர் தோல்விகளால் தத்தளித்து வருகிறது. இதனால் இந்த வருடம் CSKவின் Play Off வாய்ப்பு ‘மதில் மேல் பூனையாகத் தான்’ இருக்கிறது. குறிப்பாக சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் கூட, சென்னையால் வெல்ல முடியவில்லை என்பது தான் சோகம்.
மீண்டும் CSK கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட மகேந்திர சிங் தோனி, ”தோல்விகளை நினைத்து வருத்தப்படுவதை விட, அதிலிருந்து மீண்டுவரும் வழியைத் தான் பார்க்க வேண்டும். உணர்ச்சி வசப்படுவதில் அர்த்தமில்லை.
எங்களின் பிளெயிங் லெவனை கட்டமைத்து, அடுத்த வருடம் வலிமையான அணியாக மீண்டு வருவோம்,” என்று எதார்த்தமாக பேசியிருந்தார். இந்தநிலையில் CSK பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அண்மையில் அளித்த பேட்டியில் பத்திரிகையாளர் ஒருவர், ” மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க முடியாமல் திணறுவது தான், சென்னை அணியின் தொடர் தோல்விக்குக் காரணமா? என்று கேள்வி எழுப்பினார். பதிலுக்கு பிளெமிங், ”டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தான்” என ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக இதைப்பார்த்த ரசிகர்கள்,,” கடைசியில உண்மையை ஒத்துக்கிட்டாருப்பா. என்ன இருந்தாலும் பெரிய மனுஷன், பெரிய மனுஷன் தான் ,” என்று கிண்டலடித்து வருகின்றனர்.
CSK அணியின் ஓபனர்களாக ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத் இருவரும் களமிறங்கி ஆடி வருகின்றனர். இதில் ஷேக் ரஷீத் இளம்வீரர் என்றாலும் கூட அடித்து ஆடுகிறார். ஆனால் அனுபவ வீரரான ரச்சினோ ரன்கள் குவிக்க முடியாமல், தொடர்ச்சியாகத் திணறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.