மீன் ஒன்று 90 வயதுவரை வாழ்ந்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மெத்துசெலா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அரிய வகை ஆஸ்திரேலியப் பெண் மீன் ஒன்று, உலகிலேயே நீண்டகாலம் வாழ்ந்து வருவதாக அண்மையில் தெரியவந்துள்ளது. 4 அடி நீளம், சுமார் 18 கிலோ எடைகொண்ட இந்த மீன் நுரையீரல் மீன் என்னும் இனத்தைச் சேர்ந்தது.
நிலம், நீர்வாழ் உயிரினங்களுக்கு இடைப்பட்ட உயிரினத்தைப்போல் தோற்றம் கொண்டுள்ளது இந்த மெத்துசெலா மீன்.
அத்திப் பழத்தை விரும்பி உண்ணும் இந்த மெத்துசெலா தன் முதுகையும், வயிற்றையும் வருடிக்கொடுப்பதை விரும்புகிறதாம்.
இந்த நுரையீரல் மீன் 1938 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள கலிபோர்னியா அகடமி ஆஃப் சயின்ஸ்க்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அகடமி, மெத்துசெலாவின் வயது 90 ஆக இருக்கலாம் என்று கணித்துள்ளது.
இன்னும் நீண்டகாலம் மெத்துசெலா வாழுமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
பைபிளில் மெத்துசெலா நோவாவின் தாத்தா 969 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதன்காரணமாக இந்த நுரையீரல் மீனுக்கும் மெதுசெலா என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த அகடமியில் மேலும் 2 நுரையீரல் மீன்கள் உள்ளன. அவற்றின் வயது முறையே 40, 50 ஆக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.