ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ், புத்தம் புதிய ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ அதாவது 3வது தலைமுறை அனைத்தும் இந்த மாதம் 9ஆம் தேதி நடந்த ‘Awe Dropping’ நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.
ஆப்பிள் சமீபத்திய ஹார்டுவேர் சாதனங்களைக் காட்சிப்படுத்திய சில நாட்களுக்குப் பின், இந்த புதிய தயாரிப்புகள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது, புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்ஸ் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
தற்போது ஆப்பிள் இந்தியா வலைத்தளம், ஆப்பிள் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் வாங்குவதற்குக் கிடைக்கின்றன.
மேலும், பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் புனேவில் அமைந்துள்ள இந்தியாவில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ கடைகள் வழியாகவும் கிடைக்கும்.இந்த நிலையில், இன்று விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸை வாங்க ஆப்பிள் ஸ்டோர் நிறுவனங்கள் முன்பு காலையில் இருந்தே வாடிக்கையாளர்கள் குவிந்து இருந்தனர். வெகுநேரமாக காத்திருந்து ஐபோனை வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 17 ப்ரோ மேக்ஸுடன் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஐபோன் 17 தொடர் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட அதே நாளில், செப்டம்பர் 19, 2025 அன்று இந்தப் படங்கள் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போன்று பகிரப்பட்டன.
சமீபத்திய ஐபோன் மாடலைப் பயன்படுத்தி ஆரம்பகால படங்களைப் படம்பிடித்ததற்காக புகைப்படக் கலைஞர்களான இனெஸ் & வினூத், மிக்கலீன் தாமஸ் மற்றும் ட்ரங்க் சூ ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அவர் புகைப்படங்களை “#ShotOniPhone புகைப்படக் கலையின் அழகான காட்சி” என்று தெரிவித்துள்ளார்.