நாமக்கல்லில் 45 நாட்களுக்கு முன் இறந்து போனவர், ஹெல்மெட் அணியாமல் டிராக்டர் ஓட்டியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற விவசாயி, 45 நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவரது டிராக்டரை பெயர்மாற்றம் செய்ய குடும்பத்தினர் RTO அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஆய்வாளர், டிராக்டரை ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாக கூறி, இறந்தவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், டிராக்டரில் ஹெல்மெட் அணிவது கட்டாயமா என கேள்வி எழுப்பியதுடன், எந்தவித விதிமீறலும் செய்யாமல் அபராதத்தை எப்படி செலுத்துவது என வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.