கர்நாடக மாநிலம் கலபுரகி பகுதியை சேர்ந்தவர் சங்கர். கடந்த வியாழக்கிழமை சங்கரின் 18 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. இது குறித்து மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கரின் வீட்டிற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சங்கரின் மகள் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததும், இதனை பலமுறை கண்டித்தும் அந்த பெண் கேட்காததால் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சங்கர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் சங்கரின் உறவினர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.