AI உலகில், இப்போது ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது. கூகுளின் ஜெமினி, எலான் மஸ்க்கின் xAI என்று புதுப் புது AI-கள் களத்தில் இறங்கி, சாட்ஜிபிடியின் கோட்டையை ஆட்டம் காண வைத்திருக்கின்றன. இந்த நிலையில், இழந்த தன் சிம்மாசனத்தை மீண்டும் பிடிப்பதற்காக, ஓபன்ஏஐ நிறுவனம், தனது அடுத்த பிரம்மாஸ்திரமான GPT-5.2 மாடலை, அவசர அவசரமாகக் களத்தில் இறக்கியுள்ளது.
சமீபத்தில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், தனது ஊழியர்களுக்கு ‘கோட் ரெட்’ என்று ஒரு அவசர எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதாவது, “நம்ம கதை முடியப் போகுது, சீக்கிரம் ஏதாவது பண்ணுங்கடா,” என்று அவர் சொன்ன சில நாட்களிலேயே, இந்த புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த GPT-5.2-க்கு அப்படி என்ன பவர்? “44 விதமான வேலைகளில், அந்தந்தத் துறையில் இருக்கும் நிபுணர்களை விட, இந்த AI சூப்பராக வேலை செய்யும்,” என்று ஓபன்ஏஐ சவால் விட்டுள்ளது. அதாவது, எக்செல் ஷீட் போடுவது, பிரசன்டேஷன் ரெடி பண்ணுவது, கம்ப்யூட்டர் கோடிங் எழுதுவது என்று, பல வேலைகளை இது மனிதர்களை விடத் திறமையாகச் செய்யுமாம்.
இதற்கு ஆதாரமாக, கோடிங் சோதனையில், இது முந்தைய மாடலை விட 5% அதிக மதிப்பெண்களையும், மனிதர்களைப் போல யோசிக்கும் திறனைச் சோதிக்கும் தேர்வில், 10% அதிக மதிப்பெண்களையும் பெற்றுள்ளதாக ஓபன்ஏஐ கூறியுள்ளது. மேலும், முட்டாள்த்தனமாகப் பதில் சொல்லாமல், யோசித்து பதில் சொல்வதற்காக, இதில் ‘திங்கிங்’ (Thinking) என்ற ஒரு புது வெர்ஷனையும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால், கதை இத்தோடு முடியவில்லை. ஓபன்ஏஐ என்னதான் பெருமைபட்டுக்கொண்டாலும், கள நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது. மக்கள் வாக்களிக்கும் ‘LMarena’ என்ற தரவரிசையில், கூகுளின் ஜெமினிதான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. நம்ம ஓபன்ஏஐ-யின் GPT-5.1 மாடல், ஆறாவது இடத்தில்தான் பின்தங்கியுள்ளது. இந்த அடி வாங்கியதால்தான், ஓபன்ஏஐ இப்போது அவசர அவசரமாக இந்த 5.2 வெர்ஷனை இறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சரி, இந்த பவர்ஃபுல் AI யாருக்கெல்லாம் கிடைக்கும்? இப்போதைக்கு, காசு கட்டி சப்ஸ்கிரைப் பண்ணியிருக்கும் பிளஸ், ப்ரோ, பிசினஸ் பயனர்களுக்கு மட்டும்தான் இந்த வசதி கிடைக்கும்.
