சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றில் முதன்முறையாக, சேப்பாக்கம் மைதானத்தில் 103 ரன்களுக்கு சுருண்டு, KKRக்கு வெற்றியை தாரை வார்த்துள்ளது CSK. இதைப்பார்த்த ரசிகர்கள், ”தோக்கலாம் ஆனா இவ்வளவு மோசமா தோக்கக்கூடாது,” என வேதனைப்படுகின்றனர்.
பார்மில் இல்லாத வீரர்களை வைத்துக்கொண்டு, இன்னும் எத்தனை மேட்ச்களை சென்னை காவு கொடுக்க போகிறது என்று தெரியவில்லை. இவ்வாறு பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், IPL வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த், சென்னை அணிக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பதிவில், ”கொல்கத்தாவிற்கு எதிரான தோல்வி மிகவும் மோசமான ஒன்று. பவர்பிளே ஓவர்கள் ஏதோ டெஸ்ட் போட்டிக்கான ஒத்திகை போன்று இருக்கிறது. இந்த நேரத்தில் ஏலத்தில் விலை போகாத பிரித்வி ஷா போன்ற வீரர்களை, ஏன் சென்னை அணி முயற்சி செய்யக்கூடாது?,” என்று அட்வைஸ் செய்துள்ளார்.
சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான ருதுராஜ் கெய்க்வாட் தொடரில் இருந்து விலகியபோதே, பிரித்வி ஷாவை மாற்று வீரராக எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தொடர் முழுவதுமே தலைகீழாகத் தான் குதிப்போம் மோடில் சென்னை விளையாடி வருவதால், இதற்கு மேல் CSK போட்டிகளை பார்க்காமல் இருப்பது ரசிகர்களின் இதயத்திற்கு நல்லது.