Saturday, March 15, 2025

10 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தாலும், மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் – மு.க ஸ்டாலின் திட்டவட்டம்

கடலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ விழாவில், ‘அப்பா’ என்ற புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

கடலூர் மாவட்டம் திருப்பயரில் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ விழா நடைபெற்றது. இந்த விழாவில் அரசுப் பள்ளி கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், ‘அப்பா’ என்ற செயலியையும், விழா மலரையும் வெளியிட்டார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியில் இருக்கும் காலம் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என்று தெரிவித்தார். பிள்ளைகள் மீது பெற்றோருக்கு இருக்கும் அக்கறை, அரசுக்கும் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுகிறது என்று பாராட்டு தெரிவித்தார். அன்னை, தந்தை, ஆசிரியர்கள் இங்கு மொத்தமாக கூடியுள்ளது யாரும் காணாத காட்சி என்று தெரிவித்த அவர், ஒவ்வொரு மாணவனும் தமிழ்நாட்டின் சொத்து என்ற அடிப்படையில் கவனித்து அவர்களை வளர்த்து வருகிறோம் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மும்மொழி கொள்கை மாணவர்களை பள்ளிகளை விட்டு துரத்தும் கொள்கை என கடுமையாக விமர்சித்தார். தேசிய கல்வி கொள்கை தமிழ்நாட்டுக்கும், தமிழ்மக்களுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை என்றும் 10 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தாலும், மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மும்மொழிக் கொள்கையை ஏற்றால், தமிழ்நாடு கல்வியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் காட்டமாக கூறினார். இந்தியை திணிக்க நினைத்தால், தமிழனின் குணத்தை காட்ட வேண்டியிருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.

Latest news