தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பல்லாவரத்தில் 20 ஆயிரத்து 21 பேருக்கு, ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வியும் மருத்துவமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்றும் 2021 முதல் தற்போது வரை, 4 ஆண்டுகளில் சுமார் 17.74 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளோம் என கூறினார்.
கடந்த 5 மாதங்களில் மட்டும் 7.27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவதில் திமுக அரசு எப்போதும் முன்னுரிமை கொடுக்கும் எனவும் தெரிவித்தார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்றது என்றும் திமுக ஆட்சியில் தான் தமிழகத்தின் வளர்ச்சி இரட்டை இலக்கத்திற்கு சாத்தியமாகியுள்ளது என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வளர்ச்சி என்பது பொருளாதார அடிப்படையில்தான். அறிவு ஜீவிபோல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார் என விமர்சித்தார். மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிப்பதால் வயிற்றெரிச்சல் என பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் 2.0 இன்னும் வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும் என நம்பிக்கையுடன் கூறினார்.