சென்னை கிரீன்வேஸ் சாலை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள துல்கர் சல்மானின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
துல்கர் சல்மானுக்கு சொந்தமான ரெஸ்ட்ரோ மோட்டர்ஸ் ஆட்டோ மோட்டிவ் LLP மற்றும் Wayfarer Films பிரைவேட் லிமிடெட் அலுவலகங்களில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை நடைபெறும் இடத்தில் இரண்டு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளிவந்த ‘லோகா’ திரைப்படம் தென் இந்தியாவைத் தாண்டி, இந்தியா முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்த வசூல் தொடர்பான வருமானம் மற்றும் நிதி பரிமாற்ற ஆவணங்கள் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சில வாரங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் கேரளாவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.