இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை கடந்த ஆண்டுகளை விட கணிசமாக உயர்ந்துள்ளது. 2025 நிதியாண்டில் 1,08,873 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகிய நிலையில், 2026 நிதியாண்டில் இது 83.63% உயர்ந்து 1,99,923 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சியில் முன்னணியில் இருப்பது டாடா மோட்டார்ஸ். கடந்த நிதியாண்டில் மட்டும் அந்த நிறுவனம் சுமார் 78,811 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 35.90% வளர்ச்சியாகும். டியாகோ EV, டிகோர் EV, பன்ச் EV, நெக்ஸான் EV, கர்வ் EV, ஹேரியர் EV போன்ற பல மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் சியரா EV மற்றும் சஃபாரி EV மாடல்களையும் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அடுத்தபடியாக மஹிந்திரா நிறுவனம் மிக அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025ல் 8,426 கார்கள் விற்றிருந்த நிலையில், 2026ல் அது 42,721 ஆக உயர்ந்து 407% வளர்ச்சியை எட்டியுள்ளது. BE 6, XEV 9e, XEV 9S போன்ற புதிய மாடல்கள் மற்றும் XUV 400, XUV 3XO EV போன்ற மாடல்கள் இந்த வளர்ச்சிக்கு காரணமாகும்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியும் சமீபத்தில் எலெக்ட்ரிக் கார் சந்தையில் களமிறங்கியுள்ளது. e-விட்டாரா என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தி, மார்ச் மாதம் வரை 1,416 கார்கள் விற்பனை செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மாருதி மேலும் அதிக அளவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
