பாஜக மூத்த தலைவரும், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமாக இருந்தவர் கேப்டன் அம்ரீந்தர் சிங் (83).
இவர் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கி குவித்ததாகக் கூறி, கேப்டன் அம்ரீந்தர் சிங் மற்றும் அவரது மகன் ரனீந்தர் சிங் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ஜலந்தர் அமலாக்கத்துறை கூடுதல் இயக்குநர் ரவி திவாரி விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அம்ரீந்தர் சிங்கிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், அம்ரீந்தர் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரி ரவி திவாரி இன்று சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரியின் பணியிடமாற்றம் வழக்கமான நிர்வாக நடவடிக்கையின் ஒரு பகுதிதான் என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
