Monday, July 14, 2025

அமெரிக்க ராணுவத்தில் அதிரடி மாற்றம்! இனி ‘ஒருவழி தாக்குதல் ட்ரோன்’ தான்!

அமெரிக்கா இப்போது ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இது ஒரு சாதாரண அறிவிப்பல்ல – நேரடியாக சீனா, ரஷ்யா போன்ற சக்திவாய்ந்த நாடுகளுக்கான பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.அமெரிக்கா தனது போருக்கான திட்டத்தை இப்போது முற்றிலுமாக மாற்றியிருக்கிறது.

முன்பெல்லாம் அமெரிக்கா விலையுயர்ந்த, பெரிய ட்ரோன்களை தயாரித்து பயன்படுத்தி வந்தது. ஆனால் இப்போது, மலிவான, ஒரேமுறை பயன்படுத்தக்கூடிய ட்ரோன்கள் போதுமானது என்று முடிவு செய்திருக்கிறது.

ஏன் இந்த மாற்றம் தெரியுமா? சீனாவும் ரஷ்யாவும் ஆண்டுக்கு மில்லியன் கணக்கில் ட்ரோன்கள் உருவாக்கி, போர்க்களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
உக்ரைனும் இந்த போட்டியில் தன்னை அதிகப்படுத்தி, 4.5 மில்லியன் ட்ரோன்கள் வரை உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்துவிட்டது. இதனால் அமெரிக்கா இந்த புதிய முடிவை எடுத்து ட்ரோன்களின் உற்பத்தியை பெருக்கப் போகிறது.

2026க்குள் அமெரிக்க இராணுவம் முழுவதும் “ஒருவழி தாக்குதல் ட்ரோன்” எனப்படும், குறைந்த விலையிலான ஆளில்லா விமானங்களை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் இந்த புதிய அறிவிப்பின் நோக்கம்.

வீரர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் இந்த ட்ரோன்களை பயன்படுத்த முடியும். முக்கியமாக, இனிமேல் ட்ரோன்களை வாங்க, சோதிக்க, அல்லது பயன்படுத்த – ஒவ்வொரு முறையும் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்க வேண்டாம். நேரடியாக களத்திலிருக்கும் அதிகாரிகள் – அதாவது போர்க்களத்தில் இருக்கும் தலைவர்கள் – முடிவெடுக்கலாம்.

இது எல்லாம் எதற்காக தெரியுமா? போர்க்களத்தில் நேரத்தை வீணாக்காமல், விரைவில் முடிவெடுக்கவும், பதிலடி கொடுக்கவும் தான் எனக் கூறப்பட்டிருக்கிறது.

போரின் விதிகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டன. டாங்கிகள், ஏவுகணைகள் மட்டுமல்ல – சிறிய ட்ரோன்கள்தான் இப்போது போரின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

இந்த மாற்றம் ஏற்கனவே பல இடங்களில் நம்மால் பார்க்கப்பட்டது. இந்தியா ஒரு ரேடார் அமைப்பை ட்ரோனால் அழித்தது. உக்ரைன், ரஷ்யாவின் போர் விமானங்களை ஒரே நாளில் ட்ரோன்களால் தகர்த்தது. இப்படி ட்ரோன்கள் போர் பாணியையே முழுமையாக மாற்றியிருக்கின்றன.

அதனால்தான் அமெரிக்கா – விலையுயர்ந்த, மெதுவான திட்டங்களுக்குப் பதிலாக – வேகமான, குறைந்த செலவிலான, சக்திவாய்ந்த ட்ரோன் படையணியுடன் போருக்கு அடியெடுத்து வைத்திருக்கிறது.

இந்த முடிவை பீட் ஹெக்செத் என்ற பாதுகாப்புச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டு அமெரிக்க இராணுவத்தின் பாணியையே மாற்றியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news