‘பாகிஸ்தானை நம்பாதீங்க!’ – டிரம்புக்கு அமெரிக்கா விடுத்த ரெட் அலர்ட்!

உலக அரசியலில் “எதிரிக்கு எதிரி நண்பன்” என்பது பழமொழி. ஆனால், இங்கே எதிரிக்கும் நண்பன், நண்பனுக்கும் நண்பன் என்ற ஒரு விசித்திரமான கதாபாத்திரமாகப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் உருவெடுத்துள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இரு தரப்பிற்கும் பாலமாகச் செயல்படும் ஆசிம் முனீரை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அள்ளி அணைத்து வருவது சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மூன்று நாட்கள் தெஹ்ரான் பயணத்தை முடித்துள்ள முனீர், ட்ரம்ப் மற்றும் ஈரான் ராணுவ மேலிடம் என இரண்டு பக்கமும் “நெருக்கமான நண்பராக” வலம் வருவதுதான் இந்தச் செய்தியின் ஹைலைட்.ஆனால், இந்த “கூடா நட்பு” குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு நிபுணர்கள் இப்போது ஒரு பெரிய “ரெட் பிளாக்” (Red Flag) எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பாகிஸ்தானை ஒருபோதும் நம்பாதீர்கள் என்றும், ஆசிம் முனீருக்கும் ஈரானின் புரட்சிகர காவல்படைக்கும் (IRGC) இடையே உள்ள ஆழமான உறவு அமெரிக்காவிற்கு ஆபத்தானது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

2016-17 காலக்கட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறைத் தலைவராக இருந்தபோதே, முனீர் ஈரானுடன் ரகசிய உறவுகளை வளர்த்துக்கொண்டவர். குறிப்பாக, அமெரிக்காவால் கொல்லப்பட்ட காசிம் சுலைமானி மற்றும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹுசைன் சலாமி ஆகியோருடன் முனீருக்கு இருந்த நெருக்கமான நட்பு, இப்போது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

“ஆப்கானிஸ்தான் போரில் நமக்கு நண்பனாக நடித்துக்கொண்டே தாலிபான்களுக்குப் பாகிஸ்தான் எப்படி உதவியதோ, அதே இரட்டை வேடத்தை இப்போதும் அவர்கள் போட வாய்ப்புள்ளது” என்று பாதுகாப்பு வல்லுநர்கள் ட்ரம்ப்பை எச்சரிக்கின்றனர். ஆனால், ட்ரம்ப்போ இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், பாகிஸ்தான் வழியாக ஈரானைப் பணிய வைக்க முடியும் என்று கணக்கு போடுகிறார்.

பாகிஸ்தானில் சிவில் அரசு என்பது பெயரளவுக்குத் தான் இருக்கிறது என்பதும், ராணுவத் தளபதி முனீர் தான் நிழல் உலக ராஜாவாக ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கையில் வைத்துள்ளார் என்பதும் இந்த ராஜதந்திர நகர்வுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. தற்போது தெஹ்ரானில் ஈரான் அதிபர் மற்றும் ராணுவத் தளபதிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ள ஆசிம் முனீர், அடுத்த கட்டமாக இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இடையேயான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

ஒருபுறம் அமைதித் தூதுவர் போல முனீர் செயல்பட்டாலும், மறுபுறம் அவரது ஈரானிய விசுவாசம் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகத் திரும்புமா என்பதே இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி. ட்ரம்ப் விரிக்கும் வலையில் ஈரான் விழுமா அல்லது பாகிஸ்தான் விரிக்கும் வலையில் ட்ரம்ப் விழுவாரா என்பதை அடுத்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடக்கப்போகும் மீட்டிங் முடிவு செய்யும்.

Related News

Latest News