Thursday, December 25, 2025

ChatGPT-யை நம்பாதீங்க! எச்சரிக்கும் உரிமையாளர், என்ன காரணம்?

ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் நம் வாழ்க்கையை எளிமைப்படுத்தி, புதுமையான அனுபவங்களை தருவதில் மிகப்பெரிய புரட்சியாக இருக்கின்றன. 2022ஆம் ஆண்டு அறிமுகமான ChatGPT, உலகம் முழுவதும் பிரபலமான AI கருவியாக வளர்ந்துவிட்டது. ஆனாலும், இதை முழுமையாக நம்பக்கூடாது என்று OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மென் நேரடியாக எச்சரிக்கிறார்.

அவர் என்ன சொல்கிறாரென்றால் – மக்கள் ChatGPT மீது அதிக நம்பிக்கை வைக்கிறார்கள். இது சுவாரஸ்யமான விஷயம் தான். ஆனால், சில நேரங்களில் இது உண்மையல்லாத தகவல்களையும் நம்பிக்கையுடன் வழங்கும். இதைதான் “மாயத்தோற்றம்” என்று சொல்கிறோம்.

இது ஏன் நடக்குது? காரணம், AI பயிற்சி பெறும் தரவுகளில் bias இருக்கலாம். நிஜ உலக அறிவு குறைவாக இருக்கலாம். அல்லது பதில் தர வேண்டிய அழுத்தம் காரணமாக கூட தவறான தகவல்கள் உருவாகலாம். இந்த “மாயத்தோற்றம்” பிரச்சனையிலிருந்து எந்த AI நிறுவனமும் முழுமையாக தப்பிக்க முடியாது என்பதையும் சாம் ஆல்ட்மன் சொல்கிறார்.

அதனால் தான் அவர் கூறுகிறார் – ChatGPT-வை ஒரு நவீன உதவியாளராக மட்டுமே பார்க்க வேண்டும். அதில் வரும் தகவல்களை சரிபார்த்து, நம்முடைய அறிவையும் சிந்தனையையும் பயன்படுத்தி செயல்பட வேண்டும்.

இதே பேச்சில் அவர், “என் குழந்தைகள் ChatGPT போல புத்திசாலிகள் ஆக மாட்டார்கள். ஆனால் அவர்கள் நம்மை விட திறமையானவர்களாகவும், நம்மால் கற்பனை செய்ய முடியாத விஷயங்களைச் செய்யக்கூடியவர்களாகவும் வளருவார்கள்” என்று நம்புகிறார். மேலும், எதிர்காலத்தில் ChatGPT-க்கு விளம்பரங்கள் வருமா என்ற கேள்விக்கு, “நான் அதற்கு எதிர்ப்பு இல்லை, ஆனால் பயனர் அனுபவத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும்” என்றும் விளம்பரங்கள் பயனர்களுக்கு உதவியாக இருக்கவேண்டும், குழப்பம் ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் தெளிவாகக் கூறுகிறார்.

அதனால், ChatGPT போன்ற AI கருவிகளை நாம் பயன்படுத்தும் போது, அதில் வரும் தகவல்களை நம்பிக்கையுடன் ஏற்காமல், முன்னேறிய ஆராய்ச்சியுடனும் நம் அறிவுடனும் செயல்படுவது மிக முக்கியம். இதுவே நம் நம்பகத்தன்மையையும் அறிவுத்திறனையும் பாதுகாக்கும் வழி.

Related News

Latest News