கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அண்மையில் பிபிசிக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறியதாவது: “செயற்கை நுண்ணறிவு கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் அது பிழை செய்யும் வாய்ப்பும் உள்ளது. ஆகையால், ஏஐ கூறும் தகவல்களை நேரடியாக நம்பிவிடாமல், அவற்றை ஒரு தகவல் ஆதாரமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.
பயனர்கள் ஏஐ தரும் தகவல்களை மற்ற நம்பகமான தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்தால் மட்டுமே, இந்த தொழில்நுட்பத்தின் முழுப் பலன்களையும் அனுபவிக்க முடியும் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க ஆல்பபெட் நிறுவனம் தங்களுடைய சொந்த சூப்பர் சிப் தயாரிப்பிலும் தீவிரமாக செயல்படுவதாகவும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி போட்டியை சமாளிக்க முதலீடுகளை இரட்டிப்பாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
