இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ (valiant) எனப் பெயரிட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் 8 ஆம் தேதி அரங்கேற்றம் செய்கிறார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்கிற சாதனையைச் செய்யவுள்ள இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்காக இன்று இளையராஜா லண்டன் கிளம்பிய போது செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் “இசையமைப்பாளர் தேவா தன் இசையை இன்றைய இளைஞர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாரே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு “இந்த மாதிரி அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்கலாமா?’ எனப் பதிலளித்தார். உங்கள் அனைவரின் சார்பாகத்தான் லண்டன் செல்கிறேன். இது நாட்டின் பெருமை என்றார்.
’ஒரு தமிழராக எப்படி உணர்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘மனுஷனாக எப்படி உணர்கிறேன் என கேளுங்கள். இப்படிப்பட்ட இடைஞ்சலான கேள்விகளைக் கேட்காதீர்கள்’ என்றார்.