Thursday, February 19, 2026

சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட டொனால்டு ட்ரம்ப் – எலான் மஸ்க்!

சமீப காலத்தில் கடுமையான வார்த்தை மோதல்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர். வலதுசாரி செயற்பாட்டாளரும், ட்ரம்ப்பின் நெருங்கிய தோழருமான சார்லி கிர்க்கின் இறுதி நிகழ்வில்தான் இவர்கள் சந்தித்தனர்.

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான உரையாடலில் பங்கேற்றிருந்த சார்லி கிர்க், செப்டம்பர் 10 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். வயது 31 மட்டுமே ஆன அவரை கொன்றதாக 22 வயது டைலர் ராபின்சன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துக்குப் பின்னர், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தினார். ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் கிர்க்கின் மனைவி குற்றவாளியை மன்னிப்பதாக அறிவித்தார்.

‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ அமைப்பின் இணை நிறுவனர் சார்லி கிர்க், ட்ரம்ப்பின் வெற்றிக்காக பல்வேறு பிரச்சாரங்களில் முக்கிய பங்காற்றியவர். அவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க், அருகருகே அமர்ந்து சிறிது நேரம் உரையாடினர்.

கடந்த தேர்தலில் ட்ரம்ப்புக்கு முழுமையான ஆதரவை அளித்த மஸ்க், பின்னர் “பிக் பியூட்டிஃபுல் பில்” என்ற மசோதாவை எதிர்த்து ட்ரம்ப் அரசாங்கத்திலிருந்து விலகினார். அதன் பின் சமூக வலைதளங்களில் ட்ரம்புக்கு எதிராகக் கருத்துகள் வெளியிட்டார். ட்ரம்ப்பும் அவரை விமர்சித்தார். இதனால் இருவருக்கிடையே பிளவு ஏற்பட்டது.

ஆனால், சார்லி கிர்க்கின் இறுதி நிகழ்வில் மீண்டும் சந்தித்திருப்பது, அவர்களுக்கிடையிலான உறவில் புதிய மாற்றத்தைக் குறிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வெள்ளை மாளிகை இருவரின் புகைப்படத்தையும் வெளியிட்டது. மஸ்கும் தனது எக்ஸ் பக்கத்தில், ட்ரம்ப்புடன் இருக்கும் புகைப்படத்துடன் “சார்லிக்காக” என பதிவிட்டுள்ளார்.

Related News

Latest News