மகளிரின் பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2ஆம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, புதிய பயனாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000 தொகை வரவு வைக்கப்படும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களுக்கு தகுதி தகவல்கள் குறித்த SMS-களும் அனுப்பப்பட்டு வருகின்றன.
முன்னதாக, தகுதி இருந்தபோதும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதற்கு தீர்வாக தகுதியானவர்களை மீண்டும் கண்டறிந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதன் பேரில் அரசு சில விதிகளை தளர்த்தி அதிக அளவிலான பெண்கள் இந்த திட்டத்தின் பயனைப் பெறும் வகையிலான முடிவுகளை எடுத்தது.
இந்நிலையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் கடந்த ஜூலை 15, 2025 முதல் நடத்தப்பட்டு, மகளிர் உரிமைத்தொகைக்கான மனுக்கள் பெருமளவில் பெறப்பட்டன. அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு இறுதியான தகுதி பட்டியல் தயாரானது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் 2ஆம் கட்ட திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. அரசின் பல்வேறு திட்டங்களால் முன்னேறிய பெண்களின் சாதனைகளையும் இதில் வெளிப்படுத்தப்படுகிறது.
புதிய விண்ணப்பதாரர்களில் சுமார் 17 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல். மேலும், டிசம்பர் 12ம் தேதிக்குள் உரிமைத்தொகை வராத தகுதியானவர்கள் தங்களுடைய கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அமைச்சர் சக்ரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
மொத்தம் 29 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், உண்மையான தகுதியுடன் உள்ளவர்களுக்கு மீண்டும் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
