Sunday, April 20, 2025

‘உங்களுக்கெல்லாம்’ மனசாட்சி இருக்கா? ‘LSGயை’ கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

ரசிகர்களின் பேவரைட் கிரிக்கெட் தொடரான IPL ஒருவழியாக தொடங்கியே விட்டது. களத்தில் கப்புக்காக வீரர்கள் முட்டி மோத, அதற்கு இணையாக ஒவ்வொரு அணியின் அட்மின்களும், சமூக வலைதளங்களில் ரசிகர்களை விதவிதமாக Entertain செய்து வருகின்றனர்.

ஆனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, இந்த விஷயத்திலும் படுமோசமாகத் தான் செயல்பட்டு வருகிறது. அண்மையில் அந்த அணி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா வீரரான டேவிட் மில்லரை, ரூபாய் 7 கோடியே 50 லட்சத்துக்கு லக்னோ ஏலத்தில் எடுத்துள்ளது.

உலகின் அபாயகரமான வீரர்களில் ஒருவரான மில்லர் ICC தொடர்களில் அபாரமான பங்களிப்பினை வழங்கி வருகிறார். என்றாலும் முக்கிய கட்டத்தில் தோற்று வெளியேறுவதை, தென் ஆப்பிரிக்கா வாடிக்கையாகவே வைத்துள்ளது.

சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி செமி பைனலில், நியூசிலாந்துடன் மோதி தென் ஆப்பிரிக்கா தோல்வியைத் தழுவியது. 67 பந்துகளில் சதமடித்தும் கூட அணியை மில்லரால் கரை சேர்க்க முடியவில்லை. உடைந்த இதயத்துடன் மைதானத்தை விட்டு அவர் வெளியேறும் காட்சிகள், இணையத்தில் வைரலாகின.

இந்தநிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல, லக்னோ அணி டேவிட் மில்லரை பேட்டி எடுத்து தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதில் பேட்டி எடுப்பவர், ” IPLல் எந்த தோல்வி உங்களை அதிகம் பாதித்தது” என்று கேட்க, மில்லர் அதற்கு, ”2023 IPL பைனல்” என்கிறார்.

இதையடுத்து அவர் கேட்ட அத்தனை கேள்விகளுமே, தென் ஆப்பிரிக்காவின் நாக் அவுட் தோல்விகள் குறித்து தான். இதற்கு மில்லர் அமைதியாக பதில் அளிக்கிறார். உடைந்து போன மில்லரை, IPL கோப்பையை கையில் ஏந்தி ஆறுதல் படுத்துவோம், என்பது போல வீடியோவை முடித்துள்ளனர்.

இது ரசிகர்களுக்கு கடும் கோபத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ரசிகர்கள், ” ரொம்ப மோசமான அணி லக்னோ. வெறும் லைக்குகளுக்காக ஒருவரின் உணர்ச்சியோடு விளையாடாதீர்கள். இந்த அணி எப்போதுமே இதுபோன்ற குப்பை விஷயங்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறது.

தயவுசெய்து இந்த அணியை தடை செய்யுங்கள். 3 சீசன்களிலேயே தங்களது ரசிகர்களை இழந்து விட்டனர்,” இவ்வாறு விதவிதமாக அந்த அணியை கழுவி ஊற்றி வருகின்றனர். முன்னதாக தொடரில் தோல்வி அடைந்ததால் கேப்டன் கேஎல் ராகுலை, அணி உரிமையாளர் கோயங்கா, மைதானத்திலேயே வைத்து திட்ட அது மிகப்பெரும் சர்ச்சையானது. தற்போது மில்லர் விஷயத்திலும் எல்லைமீறி இருக்கின்றனர். இதனால் IPLன் மோசமான அணி என்ற முத்திரை லக்னோ மீது குத்தப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் அந்த அணியை, இளம்கேப்டன் ரிஷப் பண்ட் வழிநடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news