Wednesday, April 30, 2025

முதல் ‘மே தினம்’ சென்னையில்தான் நடந்தது தெரியுமா? வரலாறு…!!

“உழைப்பாளிகள் இல்லாமல் ஒரு சமுதாயமே இயங்க முடியாது. இந்த உண்மையை நினைவூட்டும் நாள்தான் ‘மே தினம்’. உலகம் முழுவதும் மே 1ஆம் தேதி, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது தியாகங்களை நினைவுகூரவும், இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தத் தினத்தின் சிறப்பு என்னவென்றால், இந்தியாவில் முதன்முறையாக மே தினம் 1923-ஆம் ஆண்டு சென்னையிலேயே கொண்டாடப்பட்டது. சிங்காரவேலர் என்ற சமூக சீர்திருத்தவாதி, இதை முதன்முறையாக ஏற்பாடு செய்தார். அதனால்தான் சென்னை, இந்தியாவில் மே தினம் கொண்டாடப்பட்ட முதல் நகரம் என்பது பெருமைக்குரியது.

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்” என்று பாரதிதாசன் பாடுவது போல, தொழிலாளர்களின் உழைப்பால் தான் நம் நாடு முன்னேறுகிறது. கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில், குறிப்பாக திமுக அரசுகளின் காலங்களில், தொழிலாளர் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

1969-ஆம் ஆண்டு, முதல்வர் கருணாநிதி தலைமையில், தனிச்சிறப்பாக தொழிலாளர் நலத்துறை உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு மே 1ஆம் தேதியை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையாக அறிவித்துத் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதே ஆண்டில், விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலிக்கான அவசரச் சட்டமும் கொண்டு வரப்பட்டது.

பீடித் தொழில், செங்கல் சூளை, பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில்கள் போன்ற பல்வேறு துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1971-ல், குடியிருப்பு நிலங்களை 1.73 லட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக்கி, நில உரிமை வழங்கப்பட்டது. மேலும், தொழிலாளர்களுக்குப் பணிக்கொடை, தொழில் விபத்து நிவாரண நிதி, ஓய்வூதியம் போன்ற பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

1990-ல் கையினால் செய்யப்படும் தீப்பெட்டிக்கான 8% விற்பனை வரி நீக்கப்பட்டு, லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதிலிருந்து காக்கப்பட்டனர். அப்போதுதான் ‘மே தினப் பூங்கா’ எனும் நினைவுச்சின்னமும் சென்னையில் உருவாக்கப்பட்டது.

மூன்றாண்டுகளில் மட்டும் 16.72 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1304 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம், இணையவழி தற்சார்பு தொழிலாளர்களுக்கான நலவாரியம், உப்பளத் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் என பல புதிய முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ஒரே நோக்கத்தில்தான் – “தொழிலாளர்கள் நலனும், உரிமையும் காக்கப்பட வேண்டும்!”

இந்த மே 1ஆம் தேதி, நாம் உழைக்கும் கைகள் மீது நம்பிக்கையுடன், அவர்களது உழைப்பை போற்றுவோம். தொழிலாளர் நலனுக்காக பாடுபடும் ஒவ்வொருவருக்கும், இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகள்!”

Latest news