தன்னை கொல்ல சதி நடந்துள்ளதாக பொய்த் தகவல் பரப்பிய மதுரை ஆதீனத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மே 2-ம் தேதி மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து காரில் சென்னை புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “என்னை திட்டமிட்டு கொலை செய்ய சதி நடந்தது” என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அதிவேகமாக கார் ஓட்டியதாக மதுரை ஆதினத்தின் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தன்னை கொல்ல சதி நடந்துள்ளதாக பொய்த் தகவல் பரப்பிய மதுரை ஆதீனத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சமீபகாலமாக மதுரை ஆதீன மடத்தை களங்கப்படுத்தும் விதமாகவும், மடத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் விதமாகவும் அவரது நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுது மதுரை ஆதீனத்துக்கு மனநலம் பாதிக்கப்பட்டது போல் தெரிகிறது. அவரை உடனடியாக மதுரை ஆதீனம் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.