டெல்லியில் கணவரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான பெண் காவலர் ஒருவர், மருத்துவமனையில் ஐந்து நாட்கள் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் 27 வயதான காஜல் என்பவராவார். அவர் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவான SWAT ஆயுதப்படையில் கமாண்டோவாக பணியாற்றி வந்தார்.
காஜலும் அங்குர் சவுத்ரியும் நான்கு ஆண்டுகளாக காதலித்து, 2023 நவம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை உள்ளது. மேலும், காஜல் தற்போது மீண்டும் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு காஜலின் கணவர் அங்குர் சவுத்ரி, உடற்பயிற்சிக்குப் பயன்படுத்தும் டம்பல் கொண்டு காஜலை தாக்கியதுடன், அவரது தலையைச் சுவரில் பலமாக மோதியுள்ளார். இதனால் காஜலுக்கு கடுமையான தலைக்காயம் ஏற்பட்டு, அவரது மூளை செயலிழந்தது.
கூடுதல் வரதட்சணையாக பணமும் காரும் கேட்டு, அங்குர் சவுத்ரி காஜலை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்குர் சவுத்ரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
