Tuesday, December 16, 2025

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுக்கும் அதிர்ச்சி!

டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு முன் டாக்டர் உமர் முகமது 3 மணி நேரம் காரிலிருந்து இறங்காமல் இருந்தது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். அதில், கார் ஓட்டிச் சென்ற டாக்டர் உமர் முகமது உயிரிழந்தார். அவர் தான் வெடிகுண்டை செயல்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதாவது என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஃபரிதாபாத்தில் இருந்து டெல்லி வரையிலான 1000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் புலனாய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில், உமர் பயன்படுத்திய ஹூண்டாய் ஐ20 கார் மயூர் விஹார் மற்றும் கன்னாட் பிளேஸ் வழியாகச் சென்றது பதிவாகியுள்ளது. பழைய ஆசஃப் அலி சாலையில் அரைமணிநேரம் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், பின்னர் செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

உமர் பயணம் செய்த பாதைகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. முதலில் மயூர் விஹார் சென்ற அவர், அங்கிருந்து திடீரென கன்னாட் பிளேஸ்க்கு காரை திருப்பியுள்ளார். இதனால் கன்னாட் பிளேஸ் தாக்குதலுக்கான இலக்காக இருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கார் காலை 8 மணிக்கு டெல்லிக்குள் நுழைந்தது. சுமார் 11 மணி நேரத்துக்குப் பிறகு வெடித்தது. அதற்கு முன் செங்கோட்டை பார்க்கிங்கில் 3 மணி நேரம் காரை விட்டு அவர் இறங்காமல் இருந்தது ஏன் என்பது மர்மமாக உள்ளது. தாக்குதலுக்கான உத்தரவை காத்திருந்தாரா அல்லது இடத்தை மாற்ற யோசித்தாரா என விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஹரியானாவில் நடந்த வெடிபொருள் பறிமுதல், கூட்டாளிகள் கைது, செங்கோட்டை விடுமுறை போன்ற காரணங்களால் அவர் பதற்றமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். உமரை வழிநடத்திய கூட்டாளிகள் யார் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related News

Latest News