Thursday, June 19, 2025

7 நாட்களில் முடிவு! டிரம்ப் போடும் ‘மாஸ்டர் பிளான்’ ! அமெரிக்காவின் இலக்கு என்ன?

மத்திய கிழக்கு பகுதி இப்போது ஒரே நெருப்புப் பந்தாக மாறியுள்ளது. இஸ்ரேல்-ஈரான் போர் தொடர்ந்து வெடிக்க, பின்னணியில் அமெரிக்காவின் பங்கு பெரிதாகி வருகிறது.

இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தும் திட்டத்தை தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்திருக்கிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவின் கூட்டத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்தத் தாக்குதலுக்கு இறுதி ஒப்புதலை அவர் இன்னும் வழங்கவில்லை. காரணம் – ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை கைவிடுகிறதா என்பதைப் பார்த்துவிட்டுத்தான் தாக்குதல் நடத்தவேண்டும் என அவர் எண்ணியிருக்கிறார்.

இதற்கு மேலும் ஒரு சட்ட ரீதியான தடையும் இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல், டிரம்ப் தனிப்பட்ட முடிவாக தாக்குதல் நடத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதற்கிடையில், அமெரிக்கா மத்திய கிழக்கில் தன் ராணுவத்தை பலமாக குவித்து வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. தற்போது வரை நடந்த தாக்குதல்களில், ஈரானில் 450க்கும் மேற்பட்டோர், இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், டிரம்ப் கூறியதாவது, “அடுத்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்… ஒரே வாரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும்!” என்றும், “ஈரான், எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல், அணு ஆயுதத்திலிருந்து முற்றிலும் விலக வேண்டும்!” என்றும் வலியுறுத்துகிறார்.

அத்துடன், ஈரானின் மிகக் கடினமாகக் கட்டப்பட்ட ஃபோர்டோவ் செறிவூட்டல் நிலையம், அமெரிக்காவின் இலக்குகளில் ஒன்றாக இருக்கலாம் என எதிர்க்கபார்க்கப்படுகிறது.மேலும் நிலத்தின் அடியில் ஆழமாக உள்ள அந்த ஆயுதகத்தை அழிப்பது சுலபமல்ல… அதற்கென சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் தேவை.

இதைப் பற்றி கேட்கப்பட்ட போது டிரம்ப், “அதைச் செய்யக்கூடிய திறன் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அதற்காக நான் அதைச் செய்கிறேன் என அர்த்தமல்ல” எனவும், தாக்குதல் நடக்காமலும் இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் சூசகமாக பதில் அளித்தார்.

முன்னதாகவே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி, “ஈரான் ஒருபோதும் யாரிடமும் சரணடையாது… அமெரிக்க தாக்குதலுக்கு கடுமையான விளைவுகள் வரும்” என எச்சரித்திருந்தார்.

ஆனால் டிரம்ப் என்ன சொல்கிறார் தெரியுமா?
“போர் நிறுத்தம் வேண்டாம்… முழுமையான வெற்றி வேண்டும்… வெற்றி என்றால் – அணு ஆயுதமில்லாத ஈரான்!” என்கிறார்.

இதுவே தற்போது நடக்கக்கூடிய மிகப்பெரிய தாக்குதலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்டுகிறது….

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news