சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் குடும்பப் பிரச்சினையில் 8 வயது சிறுமிக்கு தனது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது தனது தாத்தா மீது எந்த தவறும் இல்லை. தனது அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் சண்டை ஏற்பட்டதில் மதுபோதையில் தனது தந்தை தாத்தாவை தாக்க முற்பட்டதாகவும், தன்னை பொய் சொல்ல வற்புறுத்தியதாகவும் சிறுமி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.
புகார் கூறப்பட்ட மாமனார் வசதி படைத்தவர். அவரது மகன் எம்.இ. பட்டதாரி. ஆனால் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து பொழுதை போக்கியதாக தெரிகிறது. இதனால் தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அவரை வழக்கில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பிவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்று மகன் திட்டமிட்டு உள்ளார். இதனால் தனது மகளான சிறுமியை பயன்படுத்தி மருமகள் மூலம் பொய் புகார் கொடுத்து நாடகமாடியது, போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து பொய் புகார் கொடுத்த மருமகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.