இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசியல் சூழலில் முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் உயர்நிலை நிர்வாகிகள் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், அதன் முடிவாக நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆதரவுக் கடிதம் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் அவர்களிடம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆதரவு அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களை எட்டுவதற்காக பிற கட்சிகளின் ஆதரவை அந்தக் கட்சி தொடர்ந்து நாடி வந்தது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அறிவித்திருந்த நிலையில், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது சிபிஐ தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்திருப்பது தவெகவிற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆதரவின் மூலம் தவெக கூட்டணியின் எம்எல்ஏ எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இலக்கை எட்ட இன்னும் 4 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
தமிழக அரசியலில் அடுத்த கட்டமாக எந்தக் கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளிக்கப் போகின்றன என்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
