கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சக்லாய்ன் சுல்தான் மற்றும் அவருடைய மனைவி நிகிதா சுல்தான் இருவரும் திலக் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் பேஸ்புக் வாயிலாக விளம்பரம் செய்து ஜப்பான், நியூசிலாந்து, போன்ற நாடுகளில் வேலை வாங்கி தருவதாகவும் இதற்காக வேலைவாய்ப்பு விசாக்களை பெற்று தருவதாகவும் விளம்பரம் செய்துள்ளனர்.
இதை உண்மை என நம்பிய பலரும் இந்த தம்பதியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தமாக 2.6 கோடி ரூபாயை வசூல் செய்த இந்த தம்பதியினர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று பொழுதை கழித்துள்ளனர். பிறகு போலியான விசா தயாரித்து அனுப்பியுள்ளனர்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 50 பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த கார், பைக், 24 கிராம் தங்கம் மற்றும் 64 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விசா மோசடி விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.