2024ஆம் ஆண்டு காரை ஏற்றி ஒருவரை கொலை செய்த வழக்கில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் Bijnor பகுதியில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி நிஜேந்திர குமார் இன்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெய்தீப் மற்றும் பிந்து சவுகான் ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், குற்றவாளிகள் இருவரும் ஆத்திரமடைந்து நீதிமன்ற அறையிலேயே நீதிபதியை மிரட்டினர். “உங்கள் வீடு எங்கே உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். உங்களை விடமாட்டோம்” என்று வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, நீதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள் மீது கூடுதல் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.
