நிறம் மாறும் கார்

541
Advertisement

பட்டனைத் தொட்டால் காரின் வெளிப்புற நிறத்தை மாற்றக்கூடிய உலகின் முதல் காரை BMW நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரபலக் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Bayerische Motoren Werke AG 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே உலகம் முழுவதும் இந்த வகைக் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதிலென்ன சுவாரஸ்யம் இருக்கிறது எனக் கேட்கிறீர்களா?

குளிர்ச்சி மற்றும் வெப்பத்தின் அளவைக் குறைக்க அதிகரிக்க இது உதவும். வாகனத்தின் எரிபொருள் அல்லது மின்சார செலவையும் குறைக்க உதவும் என்கிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்.

காரின் வெளிப்புறப் பாகங்களில் கருப்பு மற்றும் வெள்ளை நிறமிகளின் துகள்களைக்கொண்ட கேப்சூல்கள் உள்ளன. அதில் பேட்டரி மூலம் நேர்மறை அல்லது எதிர்மறை மின்சாரத்தைப் பாய்ச்சும்போது வெளிப்புற நிறம் மாறுகிறது. இதனால், கார் ஓட்டுபவருக்கோ அதில் பயணிப்பவர்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக, இரண்டு பேட்டரிகள் காரில் பொருத்தப்பட்டுள்ளன.

கருப்பு நிறத்தைவிட வெள்ளை மேற்பரப்பு அதிக சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது. கோடைக்காலத்தில் சூரிய ஒளி மற்றும் அதிக வெப்ப நிலையின் விளைவாக வாகனம் சூடேறுவதைத் தவிர்க்கலாம். வாகனத்தின் வெளிப்புற நிறத்தை வெளிர் நிறமாக மாற்றுவதன்மூலம் இது சாத்தியமாகிறது.

அதேபோல, குளிர்காலத்தில் கருமை நிறம் சூரியனிலிருந்து அதிக வெப்பத்தை உறிஞ்ச உதவும். இதனால், காருக்குள் இருப்பவர்களுக்கு கதகதப்பான தட்பவெப்பம் கிடைக்கும்.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் தங்கள் வாகனங்களை இணைக்கும் சமீபத்திய முயற்சியாக இந்த நிறம் மாறும் காரை BMW நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.